search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துர்க்கையம்மன் சிலை கண்டெடுப்பு"

    வேலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    வேலூர்:

    வேலூரை அடுத்த மூஞ்சூர்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விநாயகர் சிலையை வைத்து வழிபட முடிவு செய்தனர். அதன்படி 22-ந்தேதி அங்கு ஒரு குறிப்பிட்ட இடத்தை சுத்தம் செய்து பள்ளம் தோண்டினர். அங்கு, 2½ அடி பள்ளம் தோண்டியபோது, கல்லால் ஆன 3 அடி உயரமுள்ள சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, உடைந்த நிலையில் பலிபீடம் ஆகியவை இருந்தன.

    இதுகுறித்து வருவாய்த்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள், வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். சிவலிங்கம் கிடைத்திருப்பதால், அந்த இடத்தில் நந்தி சிலை இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கருதினர்.

    இதையடுத்து அந்த இடத்தில் நேற்று பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றது. பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு 2 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டப்பட்டது. எனினும் சிலைகள் ஏதும் அங்குக் கிடைக்கவில்லை. ஆனால் பொதுமக்கள் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி தேட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    அதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) மீண்டும் அந்த இடத்தில் 5 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி சிலைகள் ஏதும் கிடைக்கிறதா? என்று தேட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம், துர்க்கையம்மன் சிலை, பலிபீடம் ஆகியவற்றை கிராம நிர்வாக அலுவலர் பிச்சை, வேலூர் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் நேற்று மாலை ஒப்படைத்தார். அங்கு, அந்த சிலைகள் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

    இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறுகையில், இந்தச் சிலைகள் விஜயநகர மன்னர்கள் காலத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம். 15 அல்லது 16-ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம், என்றார்.

    ×